search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தபால் அலுவலகம்"

    • பெண்களுக்காக தனிப்பட்ட சிறப்பு சேமிப்பு திட்டங்களையும் அளிக்கிறது.
    • குறுகிய காலத்திலேயே அதிக வட்டியை அரசு வழங்குகிறது.

    குழந்தைகள், முதியவர்களுக்கு என்று பல்வேறு சேமிப்பு திட்டங்களை தபால் அலுவலகம் வழங்குகிறது.

    அதேபோல பெண்களுக்காக தனிப்பட்ட சிறப்பு சேமிப்பு திட்டங்களையும் அளிக்கிறது. அவற்றில். `மகிளா சம்மான் சேமிப்பு சான்றிதழ்' திட்டம் குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.

    பெண்களுக்காக சிறப்பாக தொடங்கப்பட்ட திட்டமான இதில் முதலீடு செய்யப்படும் தொகைக்கு குறுகிய காலத்திலேயே அதிக வட்டியை அரசு வழங்குகிறது. அதாவது 7.5 சதவீதம் வட்டி தரப்படுகிறது.

    மகிளா சம்மான் சேமிப்பு திட்டத்தில் பெண்கள் ரூ.1000 முதல் ரூ.2 லட்சம் வரை முதலீடு செய்யலாம். இந்த திட்டத்தை மத்திய அரசு கடந்த ஆண்டு தொடங்கியது. குறுகிய காலத்திலேயே இந்த திட்டம் மிகவும் பிரபலமாகி விட்டது. இதன் முதிர்வு காலம் 2 ஆண்டுகள் ஆகும்.

    பெண்கள் சுயமாக வாழ்க்கை நடத்த உதவும் நோக்கில் இந்த திட்டத்தை அரசு நடத்தி வருகிறது. இந்த திட்டத்துக்கு கூடுதல் வட்டி அளிப்பதோடு, வருமான வரி பிரிவு 80 சி-யின்படி வரிவிலக்கும் அளிக்கப்படுகிறது. மற்றொரு முக்கிய அம்சம், இதில் 10 வயது மற்றும் அதற்கும் குறைவான பெண் குழந்தைகள் பெயரிலும் முதலீடு செய்யலாம். அதிகபட்ச வயது வரம்பு இல்லை.

    அடுத்த ஆண்டு (2025) மார்ச் 31-ந்தேதிக்கு முன்போ, அன்றைய தினமோ இந்த திட்டத்தில் பெண்கள் கணக்கை தொடங்கலாம்.

    தபால் அலுவலகம் தவிர, அனைத்து பொதுத்துறை வங்கிகள் மற்றும் 4 தனியார் வங்கிகளிலும் இந்த கணக்கை ஆரம்பிக்கலாம்.

    • முகமது ரியாஸ் உள்பட 12 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
    • இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் மாவட்ட கோர்ட்டில் அப்பீல் செய்யப்பட்டது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தில் சுற்றுலா மற்றும் பொதுப்பணித்துறை மந்திரியாக இருப்பவர் முகமது ரியாஸ். இவர் முதல்-மந்திரி பினராயி விஜயனின் மருமகன் ஆவார்.

    முகமது ரியாஸ், கடந்த 2011-ம் ஆண்டு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் கோழிக்கோடு மாவட்ட செயலாளராக இருந்தபோது, பெட்ரோலிய பொருட்களின் விலை உயர்வை கண்டித்து போராட்டம் நடத்தினார். இந்த போராட்டத்தின் போது, வடகரையில் உள்ள தலைமை தபால் அலுவலகம் சூறையாடப்பட்டது.

    இதுதொடர்பாக முகமது ரியாஸ் உள்பட 12 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. வடகரை தபால் அதிகாரி சார்பில் கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கில் ரூ.1 லட்சத்து 29 ஆயிரம் நஷ்டஈடு வழங்க கோர்ட்டு உத்தரவிட்டது. ஆனால் இதனை எதிர்த்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் மாவட்ட கோர்ட்டில் அப்பீல் செய்யப்பட்டது. இதனை ஏற்க மறுத்த மாவட்ட கோர்ட்டு, அபராத தொகையை கட்ட உத்தரவிட்டது.

    இருப்பினும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் அபராதத்தை கட்டாமல் இருந்து வந்தனர். இதுதொடர்பாக வடகரை தபால் துறை சார்பில், வடகரை கோர்ட்டில் மீண்டும் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனை விசாரித்த நீதிபதி, வட்டி மற்றும் கோர்ட்டு செலவுத் தொகை சேர்த்து ரூ.3.81 லட்சம் கட்ட உத்தரவிட்டார்.

    இதனை தொடர்ந்து மந்திரி முகமது ரியாஸ் உள்பட 12 பேரும், நீதிபதி ஜோஜி தாமஸ் முன்னி லையில் அபராத தொகையை கட்டினர்.

    • தபால் நிலையத்தில் உள்ள அறிவிப்பு பலகையில் முற்றிலும் இந்தி மொழியில் ஒரு அறிவிப்பு போஸ்டர் ஒட்டப்பட்டிருந்தது.
    • போஸ்டரை தமிழிலும், ஆங்கிலத்திலும் ஒட்ட வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    விளாத்திகுளம்:

    தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் மதுரை சாலையில் உள்ள தனியார் கட்டிடத்தில் முதல் தளத்தில் விளாத்திகுளம் கிளை தபால் அலுவலகம் செயல்பட்டு வருகிறது.

    விளாத்திகுளம் சுற்றுவட்டார பகுதியில் உள்ள சுமார் 50-க்கும் மேற்பட்ட கிராம பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் பெரும்பாலானோர் பதிவு தபால், விரைவு தபால் உள்ளிட்ட பல்வேறு சேவைகளை பெறுவதற்கு இந்த தபால் நிலையத்திற்கு வந்து செல்கின்றனர். தற்போது ஆதார் திருத்த பணிகளும் தபால் அலுவலகத்தில் நடை பெறுவதால் இங்கு தினமும் 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வந்து செல்கின்றனர்.

    இந்நிலையில் அந்த தபால் நிலையத்தில் உள்ள அறிவிப்பு பலகையில் முற்றிலும் இந்தி மொழியில் ஒரு அறிவிப்பு போஸ்டர் ஒட்டப்பட்டிருந்தது. இதனை அங்கு வந்த கிராம மக்கள் பலரும் பார்த்து விட்டு குழப்பம் அடைந்து வருகின்றனர்.

    அந்த அறிவிப்பு குறித்து தபால் அலுவலக ஊழியர்களிடம் கேட்ட போது, இணைய வழியில் மோசடி செய்பவர்களை புகார் செய்வதற்கான இணையதளம் பற்றிய தகவலும், அதற்கான இலவச தொலைபேசி எண்ணும் மற்றும் அதற்கான வழிமுறைகளும் குறித்து அதில் விளக்கபட்டுள்ளதாக தெரிவித்தனர்.

    விளாத்திகுளம் தபால் அலுவலகத்தை பயன்படுத்தி வரும் அப்பகுதி கிராம மக்களுக்கு இந்தி தெரியாததால் தபால் அலுவலகம் முன்பு ஒட்டப்பட்டுள்ள இந்தி வழிகாட்டு முறை போஸ்டரால் எந்த பயனும் இல்லை. எனவே சம்பந்தப்பட்ட தபால் துறையினர் இணைய வழி புகார், இணையதளம் மற்றும் தொலைபேசி எண், வழிகாட்டி முறைகள் அடங்கிய போஸ்டரை தமிழிலும், ஆங்கிலத்திலும் ஒட்ட வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • புதுக்கோட்டை மச்சுவாடி பகுதியில் மூடப்பட்ட தபால் அலுவலகத்தை மீண்டும் அதே இடத்தில் செயல்படுத்த வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தினர்
    • செல்போன்களின் தாக்கத்தால் தபால் சேவை குறைந்துள்ளது.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை நகரில் வடக்கு 2-ம் வீதியில் மச்சுவாடி கிளை தபால் நிலையம் நீண்ட காலமாக செயல்பட்டு வந்தது. இதனை மச்சுவாடி, காமராஜபுரம், வண்டிப்பேட்டை, ஜீவா நகர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மக்கள் பயன்படுத்தி வந்தனர்.இந்த நிலையில் மச்சுவாடி கிளை தபால் நிலையம் தற்போது மாவட்ட தலைமை தபால் நிலைய அலுவலகத்தோடு இணைக்கப்பட்டுள்ளது.இதனை புதுக்கோட்டை நகர மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குழு கண்டித்து உள்ளது.

    இது பற்றி அவர்கள் கூறும் போது, மச்சுவாடி கிளை தபால் நிலையத்தை போன்று புதுக்கோட்டை நகரில் பல கிளை தபால் நிலையங்கள் மாவட்ட தபால் நிலையத்தோடு இணைக்கப்பட்டுள்ளது. இது தபால் நிலையத்தை பயன்படுத்தும் மக்களை அப்புறப்படுத்த கூடிய செயலாகும். மச்சுவாடி கிளையில் பணிபுரிந்த ஊழியர்களின் பணி பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும். மீண்டும் மச்சுவாடி கிளை தபால் நிலையம் அதே இடத்தில் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

    ஏற்கனவே புதிய பேருந்து நிலையம், சின்னப்பா பூங்கா செல்லும் வழியில் இயங்கி வந்த தபால் நிலையங்கள் மூடப்பட்டுள்ளது. செல்போன்களின் தாக்கத்தால் தபால் சேவை குறைந்துள்ளது. ஆனால் சேமிப்பு கணக்கு தொடங்குவதற்கும், அலுவல் ரீதியிலான தபால்கள் அனுப்புவதற்கும் தபால் அலுவலகங்களை மக்கள் தொடர்ந்து பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் கிளை தபால் அலுவலகங்கள் தொடர்ச்சியாக மூடப்பட்டு வருவது மக்களுக்கு அதிர்ச்சி அளிப்பதாக அமைந்துள்ளது.


    • கோவையில் தபால் அலுவலகங்கள் மூலம் ரெயில்களில் பொதுமக்கள் பார்சல் அனுப்பும் வசதி தொடங்கியது.
    • ரெயில்களுக்கான பார்சல் கட்டணம் வசூலிக்கப்படும்.

    கோவை:

    ரெயில்களில் சரக்கு பார்சல் அனுப்பும் வசதி ஏற்கனவே நடைமுறையில் உள்ளது. இந்தநிலையில் பொதுமக்கள் தங்களது பொருட்களை தபால் அலுவலகங்கள் மூலம் ரெயில்களில் அனுப்பும் வசதி நேற்று முதல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

    இதன்படி தங்கள் பகுதியில் உள்ள தபால் அலுவலகங்களில் பொருட்களை கொடுத்து பதிவு செய்யலாம். ரெயில்களுக்கான பார்சல் கட்டணம் வசூலிக்கப்படும். நேற்று கோவையில் இருந்து சென்னை செல்லும் சதாப்தி ரெயில் மூலம் பார்சல் அனுப்பும் திட்டம் தொடங்கியது.

    இதுகுறித்து ரெயில்வே அதிகாரிகள் கூறும்போது, "816 கிலோ எடையுள்ள பொருட்களுக்கு ரூ.477 கட்டணம் வசூலிக்கப்பட்டது. இதன்படி ரெயில்களின் தூரம், ஊர் ஆகியவற்றை பொறுத்து கட்டணம் வசூலிக்கப்படும். எவ்வளவு பொருட்களை வேண்டுமானாலும் தபால் அலுவலகங்கள் மூலம் அனுப்பி வைக்கலாம். பொதுமக்கள் மற்றும் வர்த்தகர்களின் நலனை கருத்தில் கொண்டு இது செயல்படுத்தப்படுகிறது" என்று தெரிவித்ததனர்.

    இந்த நிகழ்ச்சியில் சேலம் ரெயில்வே கோட்ட வர்த்தக பிரிவு அதிகாரி பாண்டுரங்கன் மற்றும் தபால்துறை அதிகாரி அகில் நாயர் மற்றும் பலர் கலந்துகொண்டனர். தொழில்துறையினர் கூறும்போது, "இந்த திட்டம் சிறு, குறுந்தொழில்முனைவோர்களுக்கு மிகவும் உதவிகரமாக அமையும். எந்த இடத்தில் பொருட்களை உற்பத்தி செய்கிறோமோ அந்த பகுதியில் உள்ள தபால் அலுவலகங்கள் மூலம் அனுப்புவதன் மூலம் நேரம் மிச்சமாகிறது. இதற்காக தபால்துறை மற்றும் ரெயில்வே துறைக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்" என்று தெரிவித்தனர்.

    • 13-ந் தேதி முதல் 15-ந் தேதி வரை ஒவ்வொரு வீட்டிலும் தேசிய கொடி ஏற்ற பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.
    • www.epostoffice.gov.in எனும் ஆன்லைன் முகவரியிலும் பெற்று கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

     திருப்பூர் :

    நாட்டின் 75வது சுதந்திர தினத்தை கோலாகலமாக கொண்டாட மத்திய அரசு முடிவு செய்துள்ளது. வருகிற 13-ந் தேதி முதல் 15-ந் தேதி வரை ஒவ்வொரு வீட்டிலும் தேசிய கொடி ஏற்ற பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.

    மூவர்ண கொடி என்ற பிரசாரம் அடிப்படையில் நாட்டில் உள்ள 1.6 லட்சம் தபால் நிலையங்களில் மக்களுக்கு எளிதாக கிடைக்கும் வகையில் தேசியக் கொடி விற்கவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. மகளிர் சுய உதவி குழுக்கள் மூலம் உற்பத்தி செய்யப்படும் இந்திய தேசியக்கொடிகள், காகித பொருட்கள விற்பனை செய்யும் நிறுவனங்கள் மூலம் உற்பத்தி செய்யப்படும் இந்திய தேசிய கொடிகள், மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட 8 சிறு குறு நிறுவனங்கள் மூலம் உற்பத்தி செய்யப்படும் தேசிய கொடிகள் ஆகியவை பொது மக்களுக்கு விற்பனை செய்யப்படும். குறிப்பாக தபால் நிலையங்கள் மற்றும் www.epostoffice.gov.in எனும் ஆன்லைன் முகவரியிலும் பெற்று கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன்படி 20 இன்ச் அகலம் 30 இன்ச் நீளம் உள்ள தேசியக்கொடி 25 ரூபாய் மட்டுமே.

    ஒவ்வொரு வீட்டிலும் தேசிய கொடியை ஏற்ற சொல்வதால் மக்களிடையே தேசபக்தி உணர்வை ஏற்படுத்தவும், அதற்காக உழைத்தவர்களை நினைவுபடுத்துவதே இதன் திட்டமாகும். ஒவ்வொரு தபால் அலுவலகம், தலைமை அலுவலகங்கள், துணை அலுவலகங்கள், மற்றும் கிளை அலுவலகங்களில் 15 ந் தேதி தேசிய கொடி ஏற்றப்படும் என கோட்ட தபால் துறை அலுவலர்கள் தெரிவித்தனர். அதன்படி திருப்பூர் ரெயில் நிலையத்தில் உள்ள ஆர்.எம்.எஸ். தபால் நிலையத்தில் தேசியக்கொடி விற்பனை மும்முரமாக நடைபெற்று வருகிறது.

    பணி மாறுதல் கிடைக்காத விரக்தியில் தலைமை தபால் நிலையத்தை ஊழியர் சூறையாடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #postoffice

    மன்னார்குடி:

    திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி தலைமை தபால் நிலையத்தில் திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளையை சேர்ந்த ஜோயல்ராஜ் (வயது 29) என்பவர் கிளார்க்காக வேலை பார்த்து வருகிறார். இவர், தற்போது அயல் பணியாக பொதக்குடி தபால் நிலையத்தில் பணியாற்றி வருகிறார்.

    நேற்று மதியம் பொதக்குடியில் இருந்து மன்னார்குடி தலைமை தபால் நிலையத்திற்கு ஜோயல்ராஜ் வந்தார்.

    அப்போது அவர் ஆவேசமாக தலைமை தபால் நிலைய அலுவலகத்தில் உள்ள கம்ப்யூட்டர், கண்ணாடிகள், பீரோ, டேபிள், நாற்காலிகள் என அனைத்தையும் அடித்து உடைத்துசூறையாடினார். இதனால் அங்கு பணியில் இருந்த ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் தபால் நிலையத்தில் வந்திருந்த பெண்கள் அலறியடித்து கொண்டு ஓட்டம் பிடித்தனர்.

    ரகளை செய்த ஜோயல்ராஜை பிடிக்க அங்கிருந்த ஊழியர்கள் முயன்றனர். ஆனால் அவர்களால் முடியவில்லை.

     


    இதுகுறித்து மன்னார்குடி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் மன்னார்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து ஜோயல்ராஜை மடக்கிப்பிடித்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

    இதுதொடர்பாக மன்னார்குடி தலைமை தபால் நிலைய அதிகாரி சண்முகம் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜோயல்ராஜை கைது செய்தனர்.

    போலீசார் விசாரணை நடத்தியதில், ஜோயல்ராஜ் பணி மாறுதல் கேட்டு வந்துள்ளார். பணி மாறுதல் கிடைக்காத விரக்தியில் தான் அவர், தபால் நிலையத்தில் பொருட்களை சூறை யாடியதாக தெரிய வந்தது. இதற்கு முன்பும் ஏற்கனவே 2 முறை ஜோயல்ராஜ் இதுபோல் நடந்து கொண்டது குறிப்பிடத்தக்கது. #postoffice

    பெண் குழந்தைகளுக்காக பணம் சேமிக்க வசதியாக அஞ்சல் அலுவலகம்,வங்கிகளில் தொடங்கப்பட்ட செல்வமகள் சேமிப்பு திட்டத்திற்கான குறைந்தபட்ச டெபாசிட் தொகை குறைக்கப்பட்டுள்ளது. #PostOffice #SSY
    புதுடெல்லி:

    பெண் குழந்தைகளின் வருங்காலத்திற்காக, பெற்றோர்கள் பணம் சேமிக்க வசதியாக அஞ்சல் அலுவலகம், வங்கிகளில் சுகன்யா சம்ரிதி யோஜனா திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது. தமிழ்நாட்டின் அஞ்சல் அலுவலகங்களில் செல்வ மகள் சேமிப்பு திட்டமாக செயல்பட்டு வருகிறது. 

    2014-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த திட்டத்தில் 10 வயதுக்கு உட்பட்ட பெண் குழந்தையின் பெற்றோர் அல்லது காப்பாளர் கணக்கைத் தொடங்கலாம். அதிகபட்சம் 15 ஆண்டுகள் வரை, இந்த திட்டம் மூலம் முதலீடு செய்யலாம். தொடக்கத்தில் சேமிக்கும் பணத்துக்கு 9.1 சதவிகித வட்டி என அறிவிக்கப்பட்டது. ஆனால், படிப்படியாக வட்டி குறைக்கப்பட்டு தற்போது 8.1 சதவிகித வட்டி அமலில் உள்ளது. 

    இந்தக் கணக்கில் ஒரு ஆண்டுக்கு குறைந்த பட்ச தவணைத்தொகையாக ரூ.1000 செலுத்த வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. அதிக பட்சமாக ஆண்டிற்கு ரூ.1.5 லட்சம் வரை செலுத்தலாம். 

    இந்நிலையில், செல்வமகள் திட்டத்தின் குறைந்தபட்ச ஆண்டு டெபாசிட் தொகை, ரூ.250 ஆக குறைக்கப்பட்டுள்ளது. வட்டி குறைக்கப்பட்டதால், பலர் அதிருப்தி அடைந்த நிலையில் அவர்களை சரிகட்ட மத்திய அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
    ஊட்டி தலைமை தபால் அலுவலகம் முன்பு கிராம அஞ்சல் ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் மாவட்டம் முழுவதும் 2 லட்சம் தபால்கள் தேங்கி உள்ளது.
    ஊட்டி:

    அகில இந்திய கிராமப்புற அஞ்சல் ஊழியர்கள் சங்கம் சார்பில், கிராம அஞ்சல் ஊழியர்களுக்கு 7–வது ஊதியக்குழுவை அமல்படுத்த வேண்டும், கிராம அஞ்சல் ஊழியர் சங்க உறுப்பினர் சரிபார்ப்பு முடிவினை உடனே வெளியிட வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தியா முழுவதும் கடந்த 22–ந் தேதி முதல் கிராம அஞ்சல் ஊழியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    நீலகிரி மாவட்டம் ஊட்டி, குன்னூர், கோத்தகிரி உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து கிராம அஞ்சல் ஊழியர்கள் ஊட்டியில் உள்ள தலைமை தபால் அலுவலகம் முன்பு திரண்டனர். பின்னர் அவர்கள் தங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி தலைமை தபால் அலுவலகம் முன்பு வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்துக்கு கோட்ட செயலாளர் சக்ரவர்த்தி தலைமை தாங்கினார். சங்க நிர்வாகிகள் சந்திரன், சித்ராதேவி ஆகியோர் முன்னிலை வகித்தனர். போராட்டத்தின் போது கிராம அஞ்சல் ஊழியர்களுக்கு 7–வது ஊதியக்குழுவை அமல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. இதில் நிர்வாகிகள் ரேச்சல் மோசஸ், சந்திரமோகன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    கிராம அஞ்சல் ஊழியர்களின் போராட்டம் குறித்து சங்க பிரதிநிதிகள் கூறியதாவது:–

    அகில இந்திய அளவில் கிராம அஞ்சல் ஊழியர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 22–ந் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். ஆனால், எங்களது போராட்டத்தை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை. இதுதொடர்பாக சங்க பிரதிநிதிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்த முன்வரவில்லை. எனவே, கோரிக்கைகளை நிறைவேற்ற மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    நீலகிரி மாவட்டத்தில் கிராம அஞ்சல் ஊழியர்களின் போராட்டத்தால், கிராமப்புறங்களில் உள்ள அனைத்து கிளை தபால் அலுவலகங்களும் கடந்த 11 நாட்களாக பூட்டு போட்டு மூடப்பட்டு உள்ளன. இதுவரை மாவட்டம் முழுவதும் சுமார் 2 லட்சம் தபால்கள் பட்டுவாடா செய்யப்படாமல் தேங்கி உள்ளது. இதனால் வேலைக்கான அழைப்பு கடிதம், பாஸ்போர்ட், ஆதார் கார்டு உள்ளிட்ட முக்கிய தபால்கள் கிடைக்காமல் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். கிராமங்களில் உள்ள கிளை தபால் அலுவலகங்கள் மூலம் தான் 60 சதவீத வருமானம் துணை தபால் அலுவலகம் மற்றும் தலைமை தபால் அலுவலகத்துக்கு வருகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

    வடசென்னை கோட்டத்திற்கு உட்பட்ட தபால் அலுவலகங்களில் ஆதார் பதிவு, திருத்தம் உள்ளிட்ட ஆதார் தொடர்பான அனைத்து சேவைகளையும் பெற வசதிகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுள்ளது.
    சென்னை:

    வடசென்னை கோட்டத்திற்கு உட்பட்ட தபால் அலுவலகங்களில் ஆதார் பதிவு, திருத்தம் உள்ளிட்ட ஆதார் தொடர்பான அனைத்து சேவைகளையும் பெற வசதிகள் செய்யப்பட்டு உள்ளதாக சென்னை வடகோட்ட தபால் துறை முதுநிலை கோட்ட கண்காணிப்பாளர் க.குரு நாதன் கூறியுள்ளார்.

    அதன்படி பூங்காநகர் தலைமை தபால் அலுவலகம், அமைந்தகரை, அண்ணாநகர் மேற்கு, கிழக்கு, அரும்பாக்கம், அயனாவரம், சென்னை மருத்துவ கல்லூரி வளாகம், சேத்துப்பட்டு, சிந்தாதிரிப்பேட்டை, எழும்பூர், எத்திராஜ் சாலை, பூக்கடை சாலை, புனித ஜார்ஜ் தபால் அலுவலகம், ஸ்டான்லி மருத்துவமனை, ஐகோர்ட்டு, ஐ.சி.எப்., பெரியார் நகர், கீழ்ப்பாக்கம், கோயம்பேடு, மண்ணடி, மின்சார வாரியத்தில் உள்ள தபால் அலுவலகம், மிண்ட் பில்டிங், பெரம்பூர் பேரக்ஸ் சாலை, பெரம்பூர், ரிப்பன் பில்டிங், ராயபுரம், செம்பியம், ஷெனாய்நகர், சவுகார்பேட்டை, வெங்கடேசபுரம், வேப்பேரி, வியாசர்பாடி, வண்ணாரப்பேட்டை உள்ளிட்ட தபால் அலுவலகங்களில் இந்த சேவைகள் அளிக்கப்படுகிறது.

    இதில் புதிதாக ஆதார் பதிவு செய்ய கட்டணம் எதுவும் கிடையாது என்று கூறியுள்ள க.குருநாதன், ஏற்கனவே உள்ள ஆதார் விவரங்களை ரூ.30 செலுத்தி மாற்றிக்கொள்ளலாம் எனவும் தெரிவித்து உள்ளார். 
    ×